இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​13 முறை பாலியல் தொல்லை தந்த பிஷப்; பல்வேறு நாடுகளிலும் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை!

September 12, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8345 Views

கேரள மாநிலம் கோட்டயம் காவல்நிலையத்தில் கிறிஸ்தவ பிஷப் ஒருவர் தம்மை 13 முறை அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிஷப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.

ஆமென்... இந்த வார்த்தை கிறிஸ்தவர்கள் தங்கள் வழிபாடுகளில் அதிகம் உச்சரிக்கும் ஒரு வார்த்தை... உண்மையாகவே அல்லது உம் சித்தப்படி ஆகட்டும் என்ற பொருளை உணர்த்தும் ஆமென் என்ற இந்த வார்த்தை, சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிறிஸ்தவ மடம் ஒன்றில், கன்னியாஸ்திரியாக இருந்த சிஸ்டர் ஜெஸ்மி என்பவர் வெளியிட்ட ஆமென் என்ற அந்த நூலில், கிறிஸ்தவ மடங்களில் நடக்கும் கொடுமைகளை, தன்பாலின ஈர்ப்பை, பாலியல் வன்கொடுமைகளை அம்பலப்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். 

ஏசுவின் மீதுள்ள காதலால் தன் பெயரை ஜீசஸ் மீ என்று பொருள் படும்படி ஜெஸ்மி என்று மாற்றிய அந்த கன்னியாஸ்திரி, பாவமன்னிப்புக் கேட்கப் போகும் போது, பாதிரியார் ஒருவர் பெண்களைப் பிடித்து முத்தம் கொடுப்பதாகவும், தனக்கு ஒரு முறை அந்த பாதிரியார், முத்தம் தர முயன்றதாகவும் குறிப்பிட்ட பதிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்வுகள் அடங்குவதற்குள், தமிழிலும் ஒரு நாவல் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, கன்னியாஸ்திரிகளின் மீதான அடக்குமுறைகளை முன்வைத்த தமிழ் நாவல் கருக்கு... கன்னியாஸ்திரியாக இருந்து வெளியேறிய பாமா என்பவர் எழுதிய இந்த நாவலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இப்படி, கன்னியாஸ்திரிகள், பெண்களுக்கு எதிராக கிறிஸ்தவ பாதிரியார்கள் நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகள் அண்மைக்காலமாக, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முள்ளக்கல் என்பவர் தன்னை 13 முறை, அத்துமீறி பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக கேரள மாநிலம் கோட்டயத்தில், கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ளார். பிராங்கோ முள்ளக்கல்லின் கொடுமைக்கு நீதிகேட்டு, கிறிஸ்தவ மடாலயங்களை தட்டியும் நீதி கிடைக்காததால், காவல் துறையை அவர் நாடினார். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நீதி கேட்டு, சக கன்னியாஸ்திரிகள் கொச்சியில் போராட்டத்தில் குதித்திருப்பது இந்த விவகாரத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது. 

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த கேரள மாநில பூஞ்சார் தொகுதி எம்எல்ஏ ஜார்ஜ், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள தேவாலயங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் கடந்த ஓராண்டாகவே வெளியுலகிற்கு அதிகம் அம்பலமாகி வருகிறது. குறிப்பாக, கேரளாவின் ஆனிக்காடு பகுதியில், பாவமன்னிப்பு கேட்கச் சென்ற பெண்ணை 8 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். திருமணத்திற்கு முன்பு தனக்கு இருந்த காதலை, கடவுளிடம் கூறி, பாவமன்னிப்புக் கேட்கச் சென்ற அந்த பெண்ணை, பாதிரியார், பாலியல் தொல்லை கொடுத்ததோடு ஆபாசமாகவும் படம் எடுத்துள்ளார். அதனை, தனது சக பாதிரியார்களிடம் காட்டி, அந்த பெண்ணை 8 பாதிரியார்கள் தங்களது இச்சைக்கு இணங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த அவலம் இந்தியாவில் மட்டும் இல்லை. உலகின் பல்வேறு நாடுகளிலும் அண்மைக்காலமாக கன்னியாஸ்திரிகள், பெண்கள், சிறுவர்கள் மீது பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்வது அம்பலமாகி வருகிறது. 

கடந்த மே மாதம் சிலியில் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில், மூத்த பாதிரியார் ஒருவரின் குற்ற ஆதாரங்களை பிஷப்புகள் மறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. போப் ஆண்டவர் பிரான்சிஸின் கெடுபிடியால் அந்த 34 பிஷப்புகளும் தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்தது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போல், 1970களில் பாலியல் தேவைகளுக்கு தேவாலயச் சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்திய பாதிரியார் ஒருவரின் குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கத்தோலிக்கப் பேராசிரியர் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவில் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

கிறிஸ்தவ பாதிரியார்களின் இந்த பாலியல் வன்கொடுமை சர்ச்சைகளுக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிரியார்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.  

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )